×

அக். 4ல் மாநிலங்களவை எம்பி பதவிக்கு வாக்குப்பதிவு சஸ்பெண்டான 12 பாஜக எம்எல்ஏவும் ஓட்டுபோட முடியுமா?….தலைமை தேர்தல் ஆணையம் புது உத்தரவு

மும்பை: வரும் அக். 4ம் தேதி மாநிலங்களவை எம்பி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மகாராஷ்டிராவில் சஸ்பெண்டான 12 எம்எல்ஏக்களும் வாக்களிக்க ஏற்பாடுகளை செய்யும்படி, தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர்  ராஜீவ் சாத், கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனா தொற்று பாதிப்பால் இறந்தார். அதனால்,  காலியாக உள்ள மாநிலங்களவை எம்பி பதவிக்கான தேர்தல் கடந்த சில நாட்களுக்கு முன்  அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகம், மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி, மத்திய  பிரதேசத்தைச் சேர்ந்த ஆறு  மாநிலங்களவை எம்பி பதவிக்கான தேர்தல் வரும் அக்.  4ம் தேதி  நடைபெறுகிறது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் காங்கிரஸ் வேட்பாளராக  ரஜினி பாட்டீல் அறிவிக்கப்பட்டார். இவர், ஏற்கனவே மாநிலங்களவையின் முன்னாள்  உறுப்பினராகவும், தற்போது ஜம்மு-காஷ்மீரின் காங்கிரஸ் கட்சி  விவகாரங்களுக்கான பொறுப்பாளராகவும் உள்ளார். தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் முக்கிய கட்சிகளால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ள நிலையில், மகாராஷ்டிராவில் தேர்தல் நடப்பதற்கான சாத்திய கூறுகள் உள்ளன. அதனால், தேர்தலுக்கான ஏற்பாடுகளை அம்மாநில சட்டபேரவை செயலக அலுவலகம் செய்து வருகிறது. எம்எல்ஏக்களால் மாநிலங்களவை உறுப்பினர் தேர்வு செய்யப்படுவதால், ஏற்கனவே இடைநீக்கம் செய்யப்பட்ட 12 பாஜக எம்எல்ஏக்களுக்கும் (சட்டப் பேரவை கூட்டத் தொடர் நடந்தபோது, சபாநாயகரை அவதூறாக பேசி தாக்க முயன்றதால், இவர்கள் மீது ஓராண்டுக்கு சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டது) வாக்களிக்கும் உரிமை பெறமுடியுமா? என்ற கேள்வி எழுந்தது. நீண்ட பரிசீலனை மற்றும் சட்டவிதிகள் ஆராயப்பட்ட பின்னர், சஸ்பெண்ட் எம்எல்ஏக்கள் 12 பேரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதனால், மகாராஷ்டிரா சட்டப் பேரவை செயலகத்திற்கு வெளியே சஸ்பெண்ட் 12 எம்எல்ஏக்களுக்கும் தனி வாக்குச்சாவடி அமைக்க இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதால், அதற்கான ஏற்பாடுகளை சட்டப் பேரவை செயலகம் செய்து வருகிறது….

The post அக். 4ல் மாநிலங்களவை எம்பி பதவிக்கு வாக்குப்பதிவு சஸ்பெண்டான 12 பாஜக எம்எல்ஏவும் ஓட்டுபோட முடியுமா?….தலைமை தேர்தல் ஆணையம் புது உத்தரவு appeared first on Dinakaran.

Tags : BJP ,Rajya Sabha ,Mumbai ,Rajya Sabha MP ,Maharashtra ,Dinakaran ,
× RELATED 400 தொகுதிகளை வென்றால்தான் பாக்....